செங்குன்றம் அருகே காவலாளி கழுத்தறுத்து கொலை
4/28/2017 2:21:19 PM
புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பாரத் நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (55). இவர், காந்தி நகரில் தனியார் வாட்டர்கேன் கம்பெனியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி கல்பனா (50) மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் பிரபு (28) என்பவருக்கு திருமணமாகி திருவொற்றியூரில் தனியாக குடும்பத்துடன் வசித் வருகிறார். 2-வது மகன் அந்தோணி (23) பெற்றோருடன் வசிக்கிறார்.இந்நிலையில், சண்முகவேலின் மனைவி கல்பனாவும் 2-வது மகன் அந்தோணியும் நேற்றிரவு வீட்டுக்குள் படுத்து தூங்கினர். வீட்டு வராண்டாவில் சண்முகவேல் தனியே படுத்து தூங்கினார்.இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டுவாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக கல்பனா கதவை திறந்தார். அப்போது வராண்டாவில், தனது கணவர் சண்முகவேல் கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அலறி சத்தம் போட்டார்.
சண்முகவேலின் கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திக்குத்துகளுடன் ரத்தம் காய்ந்திருந்தது. கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டு மகன் அந்தோணி உட்பட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், சண்முகவேலின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து, கம்பெனியில் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது ஏதேனும் சொத்து தகராறா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் செங்குன்றத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சோழவரம் அடுத்த அருமந்தையில் தனியார் பண்ணை ஒன்றில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் காவலாளிகள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.