சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்பது குறித்து தீர்மானிக்க சிறப்பு பொது குழு கூட்டம் கூடுகிறது
4/27/2017 2:59:28 PM
மும்பை: கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன் மூலம் ஐசிசி-க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கிடைக்கும் வருவாயில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வாரியங்களுக்கு அதிக பங்கு கிடைக்கும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இந்த 3 நாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், ஐசிசி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்கண்ட 3 நாடுகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில் நிர்வாக அமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதுடன், வருவாய் பகிர்விலும் மாற்றங்களை மேற்கொள்ள, இந்தியாவின் சஷாங்க் மனோகரை தலைவராக கொண்ட ஐசிசி முடிவெடுத்தது.
இதனிடையே துபாயில் நேற்று நடந்த ஐசிசி நிர்வாக குழு கூட்டத்தின்போது, நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10ல் 9 நாடுகள் மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அத்துடன் வருவாய் பகிர்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஆதரவாகவும் 8 நாடுகள் வாக்களித்தன. இதில், இலங்கை மட்டும் பிசிசிஐ-க்கு (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ஆதரவாக வாக்களித்தது. இந்த 2 வாக்கெடுப்புகளிலும் கிடைத்த முடிவுகள் பிசிசிஐ-க்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான பிசிசிஐ-யின் அதிகாரம் குறைவதுடன், வருவாய் இழப்பும் ஏற்படும்.
ஐசிசியுடனான இந்த பிரச்னை காரணமாக வரும் ஜூன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்னும் அறிவிக்காமல் உள்ளது. அணியை அறிவிப்பதற்கான காலக்கெடு நேற்று முன் தினத்துடனே (25ம் தேதி) முடிந்து விட்டது. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இதர ஐசிசி தொடர்களில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்க, பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி நிர்வாக குழு கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்ற பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி நாளை நாடு திரும்புகிறார். அதன்பின் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ-யின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.