ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது: மயிலாப்பூரில் பரபரப்பு
4/19/2017 5:11:39 PM
சென்னை- தனியார் வங்கியில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 13 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் நீலகண்டன் தெருவை சேர்ந்தவர் அல்வின் கிறிஸ்டோபர்(40).இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியில் கட்டுவாராம். நேற்று வசூலான ரூ.32 ஆயிரத்தை அந்த வங்கியில் கட்டியுள்ளார். அதில் 13 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அவைகள் ஒரே வரிசை எண்ணில் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், கிறிஸ்டோபரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து வங்கியின் மேலாளர் சத்தியநாராயணன், இதுபற்றி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அல்வின் கிறிஸ்டோபரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டு, கட்டாக கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வந்ததாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஒரு வாரம் துறைமுகத்தில் உள்ள அனைத்து கன்டெய்னர்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் இல்லை ஆனால் தற்போது வங்கியில் புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பிடிப்பட்டிருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இந்த கள்ள நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.