கொரட்டூரில் பட்டப்பகலில் ரயில்வே அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
4/19/2017 2:16:16 PM
ஆவடி- சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், தனபால் செட்டி தெருவை சேர்ந்தவர் யமுனை கிரைவல் (55). இவர், சென்ட்ரலில் உள்ள தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சின்னராஜ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் தாமோதரன் (25), சுதர்சனம் (23) இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று காலை யமுனை வேலைக்கு கிளம்பி சென்றார். மகன்கள் மாலை 4 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு நண்பர்களை பார்க்க சென்றுவிட்டனர். வேலை முடிந்து மாலையில் யமுனை வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு கப்போர்டில் துணிமணிகளுக்குள் அடியில் மறைத்து வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கொரட்டூர் காவல்நிலையத்தில் யமுனை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசாரும் கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்தனர். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். பதிவான கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் ரேகைகளோடு ஒப்பிட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.