தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது
4/13/2017 4:55:44 PM
பூந்தமல்லி- சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் பழமையான ராமநாத ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் உள்ள பாலமுருகன் கோயிலை கடந்த 40 ஆண்டுகளாக தாமோதரன் உள்ளிட்ட தனியார் நிர்வாக குழுவினர் நடத்தி வருகின்றனர்.
பாலமுருகன் கோயில் அமைந்துள்ள இடம் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. எனவே, இக்கோயிலை கையகப்படுத்தி, இங்கு அறநிலையத்துறை சார்பில் அதிகாரி நியமிக்கப்படுவார் என இந்து அறநிலையத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து தனியார் நிர்வாக குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்து அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதையடுத்து பாலமுருகன் கோயிலை கையகப்படுத்த அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அப்போது தனியார் நிர்வாக குழுவினர் கோயிலை இழுத்து பூட்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் உதவியுடன் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பூட்டுகளை உடைத்து, பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்தனர். அங்குள்ள உண்டியல்களுக்கும் சீல் வைத்து அறநிலையத்துறை சார்பில் தனி அதிகாரியை நியமித்தனர்.
மேலும் இதுதொடர்பாக தனியார் நிர்வாக குழுவை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.