திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்
4/12/2025 5:11:17 PM
திருமலை: திருப்பதியில் உள்ள கிழக்கு பாலாஜி நகரில் நேற்றுமுன்தினம் இரவு சிறுத்தை ஒன்று பூனையை வாயில் கவ்விக்கொண்டு சென்றுள்ளது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பீதியில் கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். இதுகுறித்து, நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தார். தகவல் அறிந்த தேவஸ்தான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுத்தை வந்து சென்றதற்கான அடையாளமும், பூனையின் ரத்தக்கறையும் இருந்ததால் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதையும், குழந்தைகளை வெளியே விளையாட வைக்கவும் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாதநிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.