தொலைக்காட்சியில் நேரலை செய்தியாக கணவரின் விபத்தை அறிவித்த பெண் செய்தியாளர்
4/9/2025 4:11:49 PM
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தனது கணவரின் விபத்து நிகழ்வையே நேரலை செய்தியாக தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் வாசித்த பரிதாபம் ஏற்பட்டது. சட்டீஸ்கரில் உள்ள தனியார் தொலைக் காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர். இவர் நேற்று நேரலை செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது நிருபர் தொலைபேசி மூலமாக கார் விபத்து ஒன்றை தெரிவித்துள்ளார். படக்காட்சிகளை காட்டியபடி மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிதாரா என்ற இடத்தில் நடைபெற்ற கார் விபத்தில் 3 பேர் இறந்து போனது குறித்து சுப்ரீத் கவுர் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது காண்பித்த படக்காட்சிகளை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தனது கணவர்தான் கார் விபத்தில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. தனது சோகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மிகவும் தீரத்துடன் அந்த அரை மணி நேர செய்தி நிகழ்ச்சியை வெற்றி கரமாக முடித்து விட்டு அறைக்கு திரும்பினார்.இதற்குள் செய்தி அலுவலகம் முழுவதும் பரவி பெருத்த சோகம் நிலவியது. பின்னர் சுப்ரீத் கவுர் கண்ணீர் மல்க விபத்து குறித்த பிற தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கிருந்து விரைந்து கிளம்பி சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் உருக செய்வதாக அமைந்து விட்டது. கணவரின் விபத்து என்ற தெரிந்த பிறகும் துணிச்சலுடன் செய்தியை வாசித்து முடித்த சுப்ரீத் கவுரை சோகத்தை மறந்து பலரும் பாராட்டினர்.