ஆர்கே. நகர் தொகுதியில் டிடிவி.தினகரனை விமர்சித்து போஸ்டர்கள்
3/25/2017 12:57:44 PM
திருவொற்றியூர்- ஆர்கே. நகரில் சசிகலா அணி வேட்பாளராக டிடிவி. தினகரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தினகரனை விமர்சித்து போஸ்டர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த போஸ்டரில் ‘இது இடைத்தேர்தல் அல்ல... நீதி கேட்கும் தேர்தல். இப்படிக்கு திருவள்ளுவர் குடியிருப்போர் சங்கம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு போஸ்டரில், ‘துரோகிகளின் பணமா, அம்மா மீதுள்ள பாசமா? இப்படிக்கு பாரத் நகர் குடியிருப்போர் சங்கம்’ என்று வாசகம் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ‘அம்மாவை கொன்றது யார்? என்ற தலைப்பில் மீனவர் சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் தொகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த ஒருவரை தினகரன் ஆதரவாளர்கள் பிடித்து தண்டையார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.