மக்கள் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை - திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
3/25/2017 12:56:55 PM
பெரம்பூர்- ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றார். அவர் இன்று காலை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை 39வது வட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முன்னாள் அமைச்சர் ெபான்முடி, மாவட்ட செயலாளர் சுதர்சனம் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். வீரராகவன் தெரு, செரியன் நகர், தேசிய நகர், அசோக் நகர், கட்டபிள்ளை தெரு, துறைமுகம் குடியிருப்பு காலனி, கிராஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். ‘இப்பகுதியில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. சாலை வசதி சரியில்லை. குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இவற்றுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ என்று பொதுமக்கள் வேட்பாளர் மருதுகணேஷிடம் கோரிக்கை வைத்தனர். நான் வெற்றிப்பெற்றதும் உங்களது கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என்றார்.
பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் வேட்பாளர் மருதுகணேஷை போட்டியிடுகிறார். அவர், இந்த தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இளைஞர். சுறுசுறுப்பாக உழைக்க கூடியவர். மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது, அவரது வெற்றி உறுதியாகிவிட்டது’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.டி.மணி, பகுதி தலைவர் ஹனிபா, துணை செயலாளர்கள் ஆர்.டி.ராஜா, கே.பாலு, ஹாஜி, ரூபசங்கர் மற்றும் காங்கிரஸ் சார்பில் எம்எஸ். திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.