முகூர்த்த நேரத்தில் விஷம் குடித்தார் அக்கா - மணமகள் ஆனார் தங்கை
3/9/2025 2:20:41 PM
துறையூர்- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார்(27). பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி சரண்யா(20) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு நேற்று காலை துறையூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு நடந்தது. மணப்பெண்ணை அழைத்து வந்தனர். நேற்று காலை மணப்பெண்ணை கோயிலுக்கு அழைத்து செல்ல இருந்த நிலையில் அவர் விஷம் குடித்து மயங்கினார். இது குறித்து விசாரித்தபோது அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், தொடர்ந்து படிக்க விரும்பியதாகவும் கூறினார்.
உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் துறையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்படி மணப்பெண்ணின் தங்கை சங்கீதாவை(18) திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதித்தனர். சங்கீதா இப்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அவரிடமும் விருப்பத்தை கேட்டனர். அவரும் சம்மதம்தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாலகுமாருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் முடிந்ததும் ஆஸ்பத்திரியில்இருந்து சரண்யாவும் கிளம்பி சென்றார். மணமகன் தரப்பினர் போலீசில் கொடுத்த புகாரும் திரும்ப பெறப்பட்டது.