அஸ்வின் ஒரு மேதை - கிளார்க் பாராட்டு
3/8/2025 3:28:45 PM
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில், முதல் இன்னிங்சில் 2 விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்துவது இது 25வது முறை. உலகிலேயே அஸ்வின்தான் இந்த மைல்கல்லை மிக விரைவாக எட்டியுள்ளார். தனது 88வது போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கையின் முத்தையா முரளிதரன் 100வது போட்டியில்தான் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
சாதனை படைத்துள்ள அஸ்வினுக்கும், வெற்றி பாதைக்கு திரும்பிய இந்திய அணிக்கும் டிவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்): அஸ்வின் ஒரு மேதை. அணிக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் மற்றுமொரு முறை 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார். புத்திசாலித்தனமான வெற்றிக்கு பாராட்டுக்கள். கபில்தேவ் (இந்திய முன்னாள் கேப்டன்): சமீப காலத்தில் கிடைத்த மிகவும் சிறப்பான வெற்றி. வாழ்த்துக்கள். இதேபோல் இலங்கை முன்னாள் கேப்டன் குமார சங்ககரா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பிசிசிஐ நிர்வாக குழுவில் உள்ள ராமச்சந்திர குஹா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.