உச்சக்கட்டத்தில் உள்கட்சி மோதல்; அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி நீக்கம் - ஓபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை
2/17/2017 4:42:41 PM
சென்னை- அதிமுக உள்கட்சி மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் அணியில் உள்ள அவைத் தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கட்சி 2 ஆக உடைந்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கிய பின்பு, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய நிர்வாகிகள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், செய்தி தொடர்பாளர் பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
முதலில் பன்னீர்செல்வம், பொன்னையன், மதுசூதனன், அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டது. தொடர்ந்து சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன் அவசர, அவசரமாக பன்னீர்செல்வம் உள்பட 20 பேரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இது தொடர்பாக, பன்னீர்செல்வம் அணியின் சார்பில் தேர்தல் கமிஷனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று திடீரென பன்னீர்செல்வம் அணியினர் அடுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கியுள்ளதாக அறிவித்தனர்.
இது பற்றி, மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து, கட்சியில் இருந்து அவரால் பல ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை எவ்வித அதிகாரமும் இல்லாமல் மீண்டும் கட்சியில் சேர்த்ததாக வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். மேலும், சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்கி மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் அணியினரின் இந்த நடவடிக்கை அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், சசிகலாவின் நியமனம் குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், எது உண்மையான அதிமுக என்ற குழப்பமும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.