காதலர் தினத்தில் காதலியை மகிழ்விக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்தவர் கைது - மும்பையில் போலீசார் அதிரடி
2/15/2017 4:04:10 PM
மும்பை- மும்பையில் காதலர் தினத்தின் போது, காதலியை மகிழ்விப்பதற்காக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் காரை அலங்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று காலை 10.30 மணிக்கு வெளியான பின்பு, தமிழகம் முழுவதும் அந்த ஒரே விஷயம் மட்டுமே பரபரப்பாக பேசப்பட்டது. அதே சமயம், தமிழகத்திற்கு வெளியே உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பல்வேறு பரிசுகளையும், வாழ்த்து அட்டைகளையும் பரிமாறிக் கொண்டனர். காதலிகளை மகிழ்விக்க எப்போதும் புதுப்புது டெக்னிக்குகளை கையாள்வதில் இளைஞர்களுக்கு தனித்திறமை உண்டு. அது எல்லை கடந்தால் விபரீதமாகி விடும்.
இப்படித்தான், மும்பையில் இளைஞர் ஒருவர் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். அவர் தனது காதலியை மகிழ்விப்பதற்காக கார் முழுவதும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒட்டி அழகுபடுத்தினார். பின்னர் அந்த காரை எடுத்துக் கொண்டு பந்தாவாக தனது காதலியை பார்ப்பதற்காக மும்பை சாலைகளில் சென்றார். பணத்தால் கார் அலங்கரிக்கப்பட்டுள்ளதை கண்ட போலீசார் காரை மடக்கி பிடித்தனர். ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பயன்படுத்திய அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியின் மீதான காதல் காரணமாக ஆர்வக் கோளாறால் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் வாலிபரை பற்றிய தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். எனினும், இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது.