அதிமுக பொதுச் செயலாளரானது செல்லாது சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் மனு - மதுசூதனன் பேட்டி
2/10/2025 5:20:57 PM
சென்னை- அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது, அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரி, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று மதியம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த பேட்டி: கடந்த 1972-ம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுக துவங்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர், கட்சியின் சட்டதிட்டங்களை வகுத்தார். கட்சியின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர், கட்சிக் கொடி கட்டும் சாதாரண தொண்டனால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அதிமுக சட்டவிதி 20-ல் தெளிவாக குறிப்பிட வைத்தார். அதுமட்டுமல்லாமல், இந்த கட்சியில் தற்காலிக பொது செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட சசிகலா, கடந்த 2012-ம் ஆண்டு துவக்கத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் மார்ச் 31-ம் தேதியன்று மன்னிப்பு கேட்டு கட்சியில் சேர்ந்தார். அப்போது அவரது கடிதத்தில் ‘‘நான் எந்த அரசியலிலும் ஈடுபட மாட்டேன். தொண்டு செய்யவே வந்துள்ளேன்’’ என்று ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். அவர் கட்சிக்குள் திரும்பி வந்ததே 2012-ல்தான். ஆனால், அதிமுகவில் 5 ஆண்டுகள் கட்சி தொண்டராக இருப்பவரைத்தான் பொது செயலாளராக தேர்ந்தெடுக்க முடியும். எனவே, கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 31-ல் வந்த சசிகலா பொது செயலாளர் பதவிக்கு தகுதியற்றவர். எனவே, அவரை பொது செயலாளராக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தலைைம தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை பொது செயலாளராக தேர்ந்தெடுத்ததே தவறு. அவரை உண்மையான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு மதுசூதனன் கூறினார்.