ஓ.பன்னீர்செல்வத்துக்கு நட்சத்திரங்கள் ஆதரவு
2/10/2025 5:19:47 PM
சென்னை- தமிழகத்தில் ஆளும்கட்சியில் பிரச்னை என்றாலே அது பற்றி கருத்து கூற, சினிமா பிரபலங்கள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், தற்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கும் இடையே நடக்கும் மோதல் குறித்து நடிகர் நடிகைகள் பலரும் துணிச்சலாக கருத்து கூறி வருகின்றனர். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தங்களது இணைய தள பக்கங்களில் அவர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர். நடிகர் பார்த்திபன் குறிப்பிடுகையில், ‘‘இது ஒரு அரங்கேற்றப்பட்ட நாடகம். இதுபோன்ற அரசியல் விளையாட்டுக்களால் தமிழ்நாட்டின் மரியாதை குறைந்து விட்டது’ என மறைமுகமாக பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரேயா வெளிப்படையாகவே, ‘‘சரியான நேரத்தில் பன்னீர்செல்வம் ஹீரோவாக செயல்பட்டிருக்கிறார்’’ என்றும், இயக்குனர் கவுதம் மேனன், ‘‘நமது மொழியையும், பண்பாட்டையும் காக்கும் தன்மான தலைவர் வேண்டும்’’ என்றும் கூறியுள்ளனர்.
நடிகர் அரவிந்த்சாமி குறிப்பிடுகையில், ‘‘உங்களுக்கு விருப்பமான வேட்பாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தயவு செய்து யாரையும் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தாதீர்கள். தகுதி மற்றும் உண்மையின் அடிப்படையில் மட்டும் ஒருவரைப் பற்றி விவாதியுங்கள். எம்.எல்.ஏக்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு சரியான தீர்வாகும்? ஜனாதிபதி ஆட்சியும், மறுதேர்தலுமே சிறந்த தீர்வாக இருக்கும்” என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசன் கருத்து கூறுகையில் சசிகலாவுக்கு எதிராக மறைமுகமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.