நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 4 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ திட்டம்; பரபரப்பு தகவல்கள்
2/9/2025 5:08:12 PM
தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இவ்விரு மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவிக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகிவுள்ளன. முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன், மாணிக்கம், ஆறுகுட்டி, மனோரஞ்சிதம், ஆகிய 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ராதாபுரம், அம்பை ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் தற்போது வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் மேலும் 2 எம்எல்ஏக்கள் ஓ.பிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிகிறது. இதுதவிர நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை உள்ள 6 தொகுதிகளில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் ஓபிஎஸ் அணியில் உள்ளார். இதுதவிர 2 எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு செல்வ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை சண்முகநாதன் அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர். இவர் மாவட்ட செயலாளர், அமைச்சர் என பதவிகளை வகித்தவர். எனவே அவரது ஆதரவாளர்களாக உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள்,பகுதி, கிளை செயலாளர்கள் என பலர் உள்ளனர். அவர்களும் கூண்டோடு ஓபிஎஸ் பக்கம் வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு ஓபிஎஸ் அணிக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.