ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரம் தீர்ப்பு வழங்கக்கூடாது: மத்திய அரசு கோரிக்கை - உச்ச நீதிமன்றம் ஏற்பு
1/20/2017 2:21:29 PM
புதுடெல்லி - ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றன ஒரு சுமூகமான முடிவு எட்டப்படும்வரை ஜல்லிக்கட்டு வழக்கில் எந்த தீர்ப்பும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரியும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுடெல்லி சென்று பிரதமரை மன்மோகன் சிங்கை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரினார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை என்று முதல்வரிடம் பிரதமர் கூறியுள்ளார். இந்நிலையில், அவசர சட்டம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 நாட்களில் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி, உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ள தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் ஆஜராகி, “ ஜல்லிக்கட்டு பிரச்னை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு பிரச்னையை நிர்வாக ரீதியாக தீர்க்க மத்திய மாநில அரசுகள் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒரு நிரந்தர முடிவு எட்டப்பட்டு சுமூகமான நிலை ஏற்படும்வரை ஜல்லிக்கட்டு வழக்கில் எந்த தீர்ப்பையும் தற்போது வழங்கக்கூடாது. மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்று கூறினார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவரும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் தடை எதுவும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.