ஜல்லிக்கட்டு நடக்குமா? எதிர்பார்ப்பில் கிராமங்கள்
1/11/2025 2:59:58 PM
திருச்சி - பொங்கல் பண்டிகைக்கு பிறகு திருச்சி மாவட்டம், சூரியூர், கூத்தப்பார் மற்றும் மணப்பாறை பகுதி கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டும். அருகிலுள்ள புதுகை மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும். உச்சநீதிமன்றத் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் காளை வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமத்தினர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வேதனையடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு நடத்த வேண்டும் என்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதனை சில அயல்நாட்டு சக்திகள் வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை எந்த வகையிலும் வதை செய்யவில்லை. எந்த இடத்திலும் சட்டத்திற்கு புறம்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை குடும்பத்தில் ஒருவராகவே கருதி பாதுகாத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைபட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனர்.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தாண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள் கிராம மக்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோதிலும், சூரியூர், கூத்தப்பார் உள்ளிட்ட கிராமங்களில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக காளைகள் தயாராகிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.