அம்மாவுடன் டிபன் சாப்பிட யோகாவை கைவிட்ட மோடி
1/10/2025 2:35:52 PM
அகமதாபாத் - குஜராத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலையில் தனது தாயாரை சந்திக்க செல்வதற்காக, யோகா செய்வதை கைவிட்டார். தாயாருடன் காலை டிபன் சாப்பிட்ட மோடி, இதை டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மாலையில் அவர் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
குஜராத்தின் காந்திநகரில் குஜராத் அரசின் சார்பில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் கண்காட்சி ேநற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் 80 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்று உள்ளனர்.
இதை தொடர்ந்து, இன்று காலையில் காந்தி நகரில் உள்ள தனது தம்பி பங்கஜ் மோடி வீட்டிற்கு சென்று 97 வயது தாயார் ஹீரா பென்னை சந்தித்தார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இன்று காலை யோகா செய்வதை கைவிட்டு, தாயாரை சந்திக்க சென்றேன். அவருடன் காலை உணவு சாப்பிட்டேன். அவரிடம் ஆசி பெற்றேன். அவருடன் இருந்த நேரம் சிறப்பான நேரம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மோடி தினமும் யோகா செய்வது வழக்கம். இன்று தனது தாயை சந்திக்க சென்றதால், யோகாவை கைவிட்டிருக்கிறார். இதன்பின், காந்திநகரில் முதலீட்டாளர் மாநாட்டையொட்டி வந்துள்ள வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை மோடி சந்தித்து பேசினார். இன்று மாலை 3.30 மணிக்கு, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை அவர் துவக்கி வைக்க உள்ளார்.