சசிகலாவை குனிந்து கும்பிட்ட அமைச்சர்கள் - சமாதியில் கூடியிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி
12/10/2025 12:49:06 PM
சென்னை, - ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவை குனிந்து கும்பிட்ட அமைச்சர்களைப் பார்த்து தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் அவர்களது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6.15 மணிக்கு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். ஜெயலலிதா சமாதி முன் சிறிது நேரம் நின்று கொண்டிருந்த சசிகலா, 3 முறை தொட்டு கும்பிட்டு சமாதியை சுற்றி வந்தார். பின்னர் தயாராக கொண்டு வந்திருந்த பூவை எடுத்து சமாதி மீது தூவி வணங்கினார். இதேபோன்று சசிகலா உறவினர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சிறிது நேரம் ஜெயலலிதா சமாதி அருகே அமைதியாக நின்றுவிட்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
அவர் சமாதியில் இருந்து புறப்படும்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை பார்த்தவுடன் குனிந்து கும்பிடுவதுபோல நேற்றும் சசிகலாவுக்கும் பவ்யமாக அவ்வாறு வணக்கம் செலுத்தினர். அப்போது சமாதியில் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவரைப் பார்த்து அமைச்சர்கள் பொது இடத்தில் இப்படி கும்பிடு போடுகிறார்களே என்று தொண்டர்கள் விமர்சனம் செய்தனர்.