புதிய பொதுச் செயலாளர் தேர்வு குறித்து அமைச்சர்களுடன் 3வது நாளாக சசிகலா இன்றும் ஆலோசனை ; தம்பித்துரையுடன் திடீர் சமரசம்
12/9/2025 3:26:11 PM
சென்னை, - அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு குறித்து அமைச்சர்களுடன் சசிகலா 3வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினர். அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றது. ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு ஒரு வாரம் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சடங்குகள் முடிந்த பிறகு, கட்சியின் செயற்குழு, பொதுக் குழு கூடித்தான் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் பொதுக் குழுவில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளதால் ஆளுக்கு ஒரு கருத்தை கூறுவார்கள். இதனால், செயற்குழுவை மட்டும் கூட்டி புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஜெயலலிதா எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவராக இருந்தார். தற்போதைய அமைச்சரவையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சமூக எம்எல்ஏக்கள் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு அமைச்சர்கள் குறைவாக உள்ளனர். மேலும் முதல்வர் பதவி ஒரு சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதால், மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகத்துக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக தம்பித்துரை, செங்கோட்டையன் ஆகியோருக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்க பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சசிகலாவே தானே பொதுச் செயலாளராக வேண்டுமென விரும்புகிறார். இதனால் கடந்த 2 நாட்களாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது தம்பித்துரையை சமாதானப்படுத்தும்படி அமைச்சர்களுக்கு சசிகலா உத்தரவிட்டிருந்தார். அதனால் தம்பித்துரையை அமைச்சர்கள் சமாதானம் செய்தனர்.இந்நிலையில் 3வது நாளாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் சசிகலா, போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தம்பித்துரையும் கலந்து கொண்டார். அனைவரும் சசிகலாவை புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைப்பது என்று முடிவு செய்துள்ளனர். அதேபோல, ஆர்.கே.நகர் தொகுதியிலும் சசிகலாவே போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது கட்சியை உடைக்கவோ, புதிய தேர்தலைச் சந்திப்பதையோ அதிமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கட்சியில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளாக உள்ள பல எம்எல்ஏக்கள், மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மறைமுகமாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். சசிகலாவின் விசுவாசிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் ஓரிரு நாளில் கட்சியில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.