3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்
12/2/2025 3:20:41 PM
தண்டையார்பேட்டை, -தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இன்று காலை முதல் பொதுமக்களும் வியாபாரிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வங்கி திறந்ததும் பணம் எடுக்கலாம் என்ற ஆசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவருக்கு 3000 ரூபாய் மட்டுமே தரப்படும் என வங்கி ஊழியர்கள் கூறியதால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.