புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு
12/2/2025 3:18:59 PM
சென்னை - புதிய 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தது. அதைத் தொடர்ந்து பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் மக்கள் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டை மாற்றி புதிய நோட்டுகள் பெற குவிந்தனர். இந்நிலையில் முதல் நாள் மட்டும் ரூ.2000, ரூ.100, ரூ.50, ரூ.20 ரூ.10 நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளில் வழங்கப்பட்டது. அன்று புதிய 500 ரூபாய் நோட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. மறுநாள் ரூ.500 நோட்டு வந்துவிடும் சில்லரைக்கு தட்டுப்பாடு இருக்காது என நினைத்து மக்கள் புதிய ரூ.2000 நோட்டுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். அதை தொடர்ந்து அதிகளவில் மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. இப்போது அனைவரிடமும் ரூ.2000 நோட்டுகள் உள்ளது. ஆனால் ரூ.500 நோட்டுகள் இன்னும் புழக்கத்துக்கு வராததால் புதிய ரூ.2000 நோட்டுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்று அறிவித்து 24 நாட்களாகின்றன. ஆனால் 20 நாட்களுக்கு பிறகுதான் தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனாலும் அவை எல்லா வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் கிடைப்பதில்லை. கடந்த நான்கு நாட்களாக ரிசர்வ் வங்கி மற்றும் ஒரு சில வங்கிகளில் மட்டும்தான் புதிய ரூ.500 நோட்டுகள் கிடைக்கின்றன.
இன்னுமும் ரூ.500 நோட்டு அதிகளவில் மக்களிடம் புழக்கத்தில் வராததால் தங்களிடமுள்ள ரூ.2000 நோட்டுக்கு சில்லரை இல்லாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் தங்கள் தேவைக்காக வங்கிகளில் பணம் எடுக்கும்போது ரூ.2000 கொடுக்கப்பட்டால் வாங்க மறுத்து வருகின்றனர்.
இதே போல் ஏடிஎம்களில் பணம் எடுக்க போகும் போது ‘‘ஒன்லி ரூ.2000’’ என்ற போர்டு மாட்டப்பட்டு இருந்தால் அந்த ஏடிஎமில் பணம் எடுப்பதை தவிர்த்து ரூ.100 நோட்டுகள் வரும் ஏடிஎம்களை தேடி செல்கின்றனர் மக்கள். தினமும் கடைகள், மருத்துவமனை, மற்றும் தின கூலிகளாக வேலைகளுக்கு செல்பவர்களுக்கு அதிகபட்சம் கூலி ஒரு நாளைக்கு ரூ.500 ஆக இருக்கும் நிலையில் 4 பேருக்கு ஒரு 2000 ரூபாய் நோட்டை தந்து விடுவதால் அதை வாங்கியவர்கள் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதே போல் பல அத்தியாவசிய செலவுகளுக்கு ரூ.100, ரூ.50, ரூ.20 ரூ.10 நோட்டுகளே அதிகளவில் தேவைப்படுவதால் புதிய ரூ.2000 நோட்டை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர் பொதுமக்கள். புதிய ரூ.2000 நோட்டுகளை கையில் வைத்திருக்கும் போது பணம் இருந்தும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே உள்ளதால் ரூ.2000 நோட்டை அலட்சியமாகவே பார்த்து வருகின்றனர்.