கவர்னருடன் வைகோ இன்று திடீர் சந்திப்பு
12/2/2025 3:18:00 PM
சென்னை, - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை திடீரென தமிழக கவர்னரை சந்தித்து பேசினார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை திடீரென கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின், வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:கவர்னர் வித்யாசாகர் ராவும், நானும் நீண்டகால நண்பர்கள். தமிழக அரசியல் நிலவரம் குறித்து இன்று அவரிடம் பேசினேன். இந்த சந்திப்பு தொடர்பாக வெளிப்படையாக எதுவும் கூற முடியாது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மக்களின் நிலை குறித்தும் அவரிடம் எடுத்து கூறினேன். வரும் 10ம் தேதி பிரதமர் மோடியை கவர்னர் சந்திக்க செல்கிறார்.
அப்போது இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசுமாறு அவரிடம் தெரிவித்துள்ளேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். விலங்குகளை துன்புறுத்துவதாக கூறி, ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் உணவுக்காக ஆடு, மாடு, கோழி ஆகியவை வெட்டி கொலை செய்யப்படுவதையும் தடை செய்ய வேண்டும். பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மட்டும் தடை விதிப்பது ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.