ஜெயசுதாவுக்கு தயாரிப்பாளர் சரமாரி டோஸ் - கோபத்தில் வெளியேறினார்
12/2/2025 3:11:31 PM
கடந்த 1970களில் ராசலீலா படத்தில் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், கார்த்தி என சுமார் 6 தலைமுறைகளாக நடித்துக்கொண்டிருப்பவர் ஜெயசுதா. இந்த ஆண்டு அவர் தமிழில் நடித்த படம் ‘தோழா’. தெலுங்கில் ஏகத்துக்கு நடித்து வருகிறார். தற்போது ஆர்.நாராயண மூர்த்தி இயக்கும் ஹெட்கான்ஸ்டபிள் வெங்கட்ராமையா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஜெயசுதா. நேற்று படப்பிடிப்புக்காக யூனிட்டார் தயாராக இருந்தனர். ஜெயசுதா மிகவும் தாமதமாக வந்தார். இதில் கோபம் அடைந்த தயாரிப்பாளர் ஜெயசுதா மேனேஜரை அழைத்து திட்டினார். இதை அறிந்ததும் கோபம் அடைந்த ஜெயசுதா உடனடியாக படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது.
விவரம் அறிந்த இயக்குனர், ஜெயசுதாவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். தாமதமாக வந்ததற்கு தான் காரணமில்லை. படத்தின் காஸ்டியூமர் உரிய நேரத்தில் காஸ்டியூம் தராததே காரணம் என்று விளக்கம் அளித்தார் ஜெயசுதா. இதையடுத்து தயாரிப்பாளருக்கும், ஜெயசுதாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக ஜெயசுதா தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, ’புரிதல் இல்லாமல்போனதுதான் இந்த சம்பவத்துக்கு காரணம். என் தரப்பில் தாமதம் இல்லை என்று இயக்குனர் கூறிவிட்டார். எனவே 3ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்பேன்’ என்றார்