கால்பந்து வீரர்கள் உள்பட 71 பேர் பலி - விபத்தில் சிக்கிய விமானத்தில் எரிபொருள் நிரப்ப முடியாமல் போனது எதனால்?
12/2/2025 3:09:35 PM
போகோட்டா: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாண்டா குரூஸ் விமான நிலையத்தில் இருந்து, கொலம்பியாவின் மெட்லின் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், மெட்லின் நகருக்கு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த பிரேசில் நாட்டின் சாபோகோயின்ஸ் கால்பந்து கிளப் அணி வீரர்கள் உள்பட மொத்தம் 71 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், எரிபொருள் இல்லாததால் அவசரமாக தரையிறங்க உதவி செய்யும்படி, மெட்லின் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை, விமானத்தின் பைலட் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. எரிபொருள் தீர்ந்ததால், விமானம் விபத்தில் சிக்குவது என்பது மிகவும் அரிதானது. இதை அறிந்த கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உண்மையில் சாண்டா குரூஸில் இருந்து விமானம் கிளம்பியதும், பொலிவியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபிஜாவில் மீண்டும் எரிபொருள் நிரப்பி கொள்ளவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே ஒன்றரை மணி நேரம் தாமதம் காரணமாக, கோபிஜாவில் எரிபொருள் நிரப்ப முடியவில்லை. இதனால்தான் சாண்டா குரூஸ்ஸில் இருந்து நேராக மெட்லினுக்கு பறக்க, பைலட் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, எரிபொருளின் அளவு தவறாக கணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய லாமியா விமான நிறுவனத்தின் இயக்க உரிமத்தை பொலிவியா அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கும் முன்பாக, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என யுஇஎப்ஏ (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்) தெரிவித்துள்ளது. இது குறித்து யுஇஎப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செப்ரின் கூறுகையில், சாபோகோயின்ஸ் கால்பந்து வீரர்களின் மரணம் கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் ஆதரவை வழங்க விரும்புகிறோம். அடுத்த வாரத்தில் நடைபெற உள்ள அனைத்து சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கு முன்னதாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்றார்.