வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்
12/2/2025 2:29:17 PM
வேப்பனஹள்ளி, -வேப்பனஹள்ளி அருகே நிலைதடுமாறி தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் வீட்டுக்குள் புகுந்தது. இதில், தூங்கிக் கொண்டிருந்த விவசாயி படுகாயமடைந்தார்.கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பராமரிப்பு பணிக்காக தனியார் பஸ் கொண்டு வரப்பட்டது. அங்கு, பராமரிப்பு பணிகளை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை வேப்பனஹள்ளி வழியாக கோலார் தங்க வயல் சென்றது. கங்கமடுகு கிராமத்தில் சென்றபோது, திடீரென தறிகெட்டு ஓடிசாலையோரம் இருந்த வீட்டின் மீது பயங்கரமாக மோதியவாறு புகுந்தது. இதில், வீடு முழுவதும் சேதமடைமந்தது.
இந்த விபத்தில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி ராமப்பா (45) என்பவர் பஸ்சுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராமப்பாவை மீட்டனர்.பின்னர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.