50, 100 ரூபாய் நோட்டுகளை வங்கியில் குவித்த வணிகர்
11/19/2016 12:31:09 PM
மொரதாபாத், - நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு மற்றும் சில்லரை தட்டுப்பாடால் மக்கள் அவதிப்பட்டு ெகாண்டிருக்க, உ.பி.யில் ஒரு வணிகர் தன்னிடம் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான ரூ.50, ரூ.100 நோட்டுகளை வங்கியில் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்பு, மக்கள் அவற்றை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். ஆனால், புதிய ரூ.500 நோட்டு நேற்று வரை விநியோகிக்கப்படவில்லை. ரூ.2000 நோட்டுகளே அதிகமாக தரப்படுவதால் சில்லரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத் நகரில் அவ்தேஷ் குமார் குப்தா என்ற சிறுவணிகர், அங்கு புத்திபிகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளையில் வைத்துள்ள தனது கணக்கில் ஒன்றரை லட்சம் மதிப்புக்கு ரூ.50, ரூ.100 நோட்டுகளை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘‘புதிய ரூ.500 வராததால், குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் மையங்களில் முதியவர்கள் நிற்பதையும், அவர்கள் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாமல் தவிப்பதையும் பார்த்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்.அதனால், என்னிடம் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 50, 100 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறேன். இந்தப் பணம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்குப் பயன்படும். இதேபோல் மற்றவர்களும் தங்களிடம் உள்ள குறைந்த மதிப்புடைய பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி உதவலாம்’’ என்றார்.