ஆயுட்கால தடை விதிக்கப்பட்ட கனேரியாவுக்கு இறுதியாக அனுதாபம் காட்டியது பிசிபி
11/18/2016 4:32:20 PM
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லெக்-ஸ்பின்னர் கனேரியா, 4 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் (இசிபி), ஆயுட்கால தடை விதிக்கப்பட்டார். இங்கிலீஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், எசக்ஸ் அணிக்காக விளையாடும்போது, ஊழல் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தடையை நீக்க, கனேரியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் கனேரியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இறுதியாக, கனேரியா மீது தற்போது அனுதாபம் காட்டியுள்ளது.
கிரிக்கெட் சார்ந்த துறையில், நல்ல ஊதியத்துடன், நிரந்தர வேலை கிடைக்க அவருக்கு பிசிபி உதவி செய்துள்ளது. அந்நாட்டின் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின், பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் குமார் வான்குவானி, கனேரியா மீது இசிபி-யால் திணிக்கப்பட்ட தடைக்கு எதிராக பிசிபி எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டி, கனேரியாவுக்கு ஆதரவாக இந்த பிரச்னையை மீண்டும் கிளப்பி, அவருக்கு உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.