டெல்லியில் கரன்சி பாதிப்பு விவகாரம் - சிறு வணிகர்களிடம் இரவில் குறைகளை கேட்ட ராகுல் ; மார்க்கெட்டுக்கு நடந்து சென்று சந்தித்தார்
11/18/2016 3:30:18 PM
புதுடெல்லி, -கரன்சி வாபஸ் அறிவிப்பு காரணமாக டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களிடம் நேற்று இரவு ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்தார்.கரன்சி வாபஸ் காரணமாக சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வங்கியில் ரூ.500, ரூ.1000 மாற்றுவதில் கெடுபிடி, வங்கியில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு காரணமாக பொருட்களை கொள்முதல் செய்ய இயலாமல் சிறு வணிகர்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் சிறு வணிகம், குறுந்தொழில், கைத்தொழில் ஆகியவை முடங்கியுள்ளன. கரன்சி வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். கரன்சி வாபஸ் அறிவிப்பை திரும்ப பெற மத்திய அரசுக்கு 3 நாள் கெடுவும் விதித்துள்ளனர்.
இந்த சூழலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் நேற்று இரவு 8.45 மணி அளவில் சரோஜினி நகர் மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சிறு வணிகர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் நடந்து சென்ற ராகுல்காந்தி பலரிடம் கரன்சி தட்டுப்பாடால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கருப்பு பணத்தை பதுக்கியுள்ள பணக்காரர்கள் தப்பி வகை செய்துள்ள மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சிறு வணிகர்கள், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.