கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதால் மம்தா, கெஜ்ரிவாலுக்கு பாதிப்பு - பாஜ காட்டம்
11/18/2016 3:29:05 PM
புதுடெல்லி, - கரன்சி விவகாரத்தால், மம்தாவும் கெஜ்ரிவாலும் ஏராளமான கருப்பு பணத்தை இழந்திருக்கிறார்கள். அதனால்தான் ஆவேசப்படுகின்றனர் என பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து நேற்று டெல்லியில் கெஜ்ரிவாலும், மம்தாவும் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமரின் அறிவிப்பை வாபஸ் பெற மத்திய அரசுக்கு 3 நாள் கெடு விதித்துள்ளனர். போராட்டம் நடத்தியதுடன் டெல்லியின் பல்வேறு இடங்களிலும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் வரிசையில் நின்றிருந்த மக்களை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், பாஜ செய்தி தொடர்பாளர் காந்த் சர்மா கூறுகையில், ‘‘கருப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் சர்ஜிக்கல் தாக்குதல் காரணமாக ஒரு சிலர் வேதனை அடைந்துள்ளனர். அவர்களில் கெஜ்ரிவாலும், மம்தாவும் உள்ளனர். அவர்கள் கருப்பு பணத்தை இழந்திருப்பதால்தான் இப்படி ஆவேசப்படுகின்றனர். பிரதமர் மோடியை விமர்சிப்பதில் அவர்கள் வரம்பு மீறி செல்கின்றனர். கரன்சி விவகாரத்தில் இருவரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் இவ்வாறு பேசுவது மக்களை ஏமாற்றத்தான். கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அன்னா ஹசாரேவின் சீடர் தற்போது ஊழல் செய்தவர்களுடன் நின்று கொண்டிருக்கிறார். பிரதமர் அறிவிப்புக்கு அன்னா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவரது சீடர் கெஜ்ரிவால் எதிர்க்கிறார்’’ என்று சாடினார்.