மத்திய அரசு அறிவிப்பு செயல்படுவது எப்போது? சென்னை பெட்ரோல் பங்க்குகளில் ரூ2000 விநியோகம் துவங்கவில்லை - டெபிட் கார்டுடன் வந்த மக்கள் ஏமாற்றம்
11/18/2016 3:27:56 PM
சென்னை, - வங்கி டெபிட் கார்டை பயன்படுத்தி இன்று முதல் பெட்ரோல் பங்க்குகளில் ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், சென்னை பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் இத்திட்டம் துவங்கப்படாததால் டெபிட் கார்டுடன் வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மத்திய அரசின் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை எடுத்து சென்று வங்கிகளில் மாற்றி வருகின்றனர். முதலில் ஒருவருக்கு ரூ.4000 மாற்றித் தரப்பட்டது. அது ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின், சிலர் கருப்பு பணத்தை ஏழை மக்கள் மூலம் வங்கிகளில் மாற்றுவதாகவும், இதனால் ஒருவரே பல முறை வங்கிக்கு வருவதால் கூட்டநெரிசல் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, ஒருவர் ரூ.2000க்கு மட்டுமே பழைய நோட்டுகளை மாற்றலாம் என நேற்று முதல் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 2000 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கிடையே 10 நாட்களாகியும் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. அதே போல், பாதி ஏடிஎம்களில் மதியத்திற்குள் பணம் தீர்ந்து அந்த மையங்கள் மூடப்படுகின்றன. இதையடுத்து, ஏடிஎம்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, இன்று முதல் பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டை(ஏடிஎம் கார்டு) பயன்படுத்தி ரூ.2000 வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்றிரவு அறிவித்தது. இதற்காக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகிய 3 எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளுடன் எஸ்பிஐ வங்கி சேர்மன் அருந்ததி பட்டச்சார்யா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ, சிட்டி பாங்க், எச்டிஎப்சி பாங்க் ஆகியவையும் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. நாடு முழுவதும் முதல் கட்டமாக இன்று 2500 பெட்ரோல் பங்க்குகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்பின், ெமாத்தம் 25 ஆயிரம் பெட்ேரால் பங்குகளில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் கேட்ட மக்கள் பலரும் பெட்ரோல் பங்க்குகளுக்கு இன்று காலை சென்று விசாரித்தனர். ஆனால், சென்னையில் எந்த ெபட்ரோல் பங்க்கிலும் இன்று காலையில் டெபிட் கார்டுக்கு பணம் அளிக்கப்படவில்லை, இதனால், டெபிட் கார்டுடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் ஏடிஎம்களை நோக்கி படையெடுத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் முரளி கூறியதாவது:
தற்போது பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல், டீசல் போடுபவர்களிடம் 24 மணி நேரமும் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வாங்கப்படுகிறது. வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வங்கி கவுன்டர் திறக்குமாறு பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, ஏடிஎம் மையம் போல் பெட்ரோல் பங்க்கில் டெபிட் கார்டுக்கு ரூ.2000 விநியாகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில் முதல்கட்டமாக 2,500 பங்க்குகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எஸ்பிஐ வங்கியின் ‘பாய்ண்ட் ஆப் சேல்’ மிஷின் வைத்துள்ள பெட்ரோல் பங்க்குகளில் மட்டுமே தற்போது பணம் பெற முடியும். ஒரு பெட்ரோல் பங்க் தினமும் ரூ.1 லட்சம் வரை வங்கியில் பெற்று வந்து அதை மக்களுக்கு தலா ரூ.2000 வீதம் வழங்கலாம். தமிழகத்தில் இன்று மாலை அல்லது நாளை இத்திட்டம் தொடங்கப்படும் சென்னையில் உள்ள 600 பெட்ரோல் பங்க்குகளில் சுமார் 250 இடங்களில் ரூ.2000 வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.