தாராபுரம் அருகே இன்று பயங்கரம் - கார் மீது அரசு பஸ் மோதல் 4 பேர் பரிதாப பலி
11/18/2016 2:47:00 PM
தாராபுரம், -திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் இன்று அதிகாலை கார் மீது அரசு பஸ் ேமாதியதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த 4 பேர் காரில் கோவை சென்றுவிட்டு திரும்பினர். இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல்நிலையம் அருகே மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த அரசுபஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில், காரிலிருந்த சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (42), சரவணன்(41), முருகன்(44), பூவண்ணன்(45) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் அனைவரும் உறவினர்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்பு படையினர் காரில் சிக்கியிருந்த 4 பேரது உடல்களையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டடம் போலீசார் அரசுபஸ் ஓட்டுனர் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான வேலுச்சாமிக்கு, ராஜேஸ்வரி(32) என்ற மனைவியும் ஜீவன், ஜீவா, ஜீவிதா, அஜிதா, அஜித் என்ற 5 குழந்தைகள் உள்ளனர். இதில் ஜீவா என்பவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார். அவரை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது. சரவணனுக்கு அழகம்மாள்(30) என்ற மனைவியும், சதா, சரண், சாலினி என்ற 3 குழந்தைகளும், முருகனுக்கு தனலட்சுமி(35) என்ற மனைவியும், தருண் என்ற மகனும், பூவண்ணனுக்கு சோபா (33) என்ற மனைவியும், ஆதி என்ற மகனும் உள்ளனர். விபத்தில் சிக்கிய காரை பூவண்ணன் ஓட்டிவந்தார் என தெரிய வந்துள்ளது.