கண்களை மூடிக் கொண்டு அம்மன் சிலைகளை நீராட்டும் பூசாரி... இருட்டறையில் நடக்கிறது அக்கா, தங்கை பூஜை... ஆச்சரியமூட்டும் இப்படியொரு திருவிழா, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடக்கிறது. அரியக்கா, பெரியக்கா என்றழைக்கப்படும் அக்கா, தங்கை அம்மன்களுக்கு பக்தர்கள் எடுக்கும் இந்த அதிசய திருவிழாவில் பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அரியக்கா-பெரியக்கா கோயில் உள்ளது. கோயிலே சற்று வித்தியாசமாக உள்ளது. சாமி சிலைகள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு கல்தூண்களின் மீது ஒரு கல் தூண் சுமத்திய ஒரு அமைப்பு உள்ளது. அருகிலேயே ஒரு சிறிய இருட்டறை உள்ளது. அதிலும் சிலைகள் எதுவும் இன்றி காலியாவே இருக்கிறது. திருவிழா காலத்தில் மட்டுமே கோயிலில் அம்மன் சிலைகள் வைத்து பூஜை நடத்திப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நள்ளிரவில் நடக்கும் விழாவுக்காக, எட்டிப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள குடிசையில் இருந்து நள்ளிரவில் அம்மன் சிலைகள் எடுத்து வரப்படுகின்றன. அரியக்கா, பெரியக்கா என்றழைக்கப்படும் இரு அம்மன் சிலைகள் அந்த குடிசையில் ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருக்கும். குடிசையில் எந்த வெளிச்சமும் கிடையாது. அங்கிருந்து ஒரு கூடையில் வைத்து பெட்டி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அக்கா, தங்கையாக சொல்லப்படும் அரியக்கா, பெரியக்கா அம்மன் சிலைகளை யாரும் இதுவரை பார்த்ததில்லை என்று கிராமமக்கள் சொல்லும் தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.
முதலில் எட்டிப்பட்டியில் இருந்து அம்மன் சிலைகளை கொடமாண்டப்பட்டி, பாளையத்தோட்டம், போச்சம்பள்ளி வழியாக எடுத்து வந்து கரடியூரில் உள்ள செல்லியம்மன் கோயிலில் வைக்கிறார்கள். பின்னர் அங்கு ராட்சத ஊஞ்சலில் வைத்து ஆட்டி அரியக்கா, பெரியக்கா சுவாமிகளுக்கு தாலாட்டு உற்சவம் நடத்தப்படுகிறது. பெட்டியை இறக்கிவைக்கும் போது ஒரு ஆடும், தூக்கிச் செல்லும்போது மற்றொரு ஆடும் வெட்டப்படுகிறது. உடல் முழுவதும் கறுப்பாக இருக்கும் ஆடுதான் வெட்டப்படுமாம். சிறிய பிசிறு இருந்தால் கூட வெட்டுவதில்லை என்கிறார்கள் கிராமத்தினர். கறுப்பு நிற ஆடுகளே விருப்பமாய் வெட்டப்படுவதால், விழாவில் கறுப்பு நிறத்தை அறவே தவிர்த்து விடுகிறார்கள். கறுப்பு நிற ஆடை அல்லது கறுப்பு நிறப் பொருட்களோடு வருபவர்கள் விழாவில் அனுமதிக்கப்படுவதில்லை. மீறி நுழைந்து விட்டால் தெய்வ குத்தம் ஏற்படும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருப்பதால், இதற்காவே ஆட்களை நியமித்து கவனிக்க செய்கிறார்கள்.
விழாவில் பலியிட்ட ஆடுகளை நான்கைந்து துண்டாக வெட்டி, பானையில் உப்பு, மிளகாய் மட்டும் போட்டு வேக வைத்து கறி விருந்து நடக்கிறது. சிலைகள் மருதேரி தென்பெண்ணையாறு வரை எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ஆற்றில் அம்மன் சிலைகளை குளிப்பாட்டும்போது பூசாரி கண்களை மூடிக் கொள்கிறார். பக்தர்களும் பார்ப்பதில்லை. மீண்டும் பெட்டி கூடைக்குள் வைக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு இருட்டறையில் வைத்து பூஜை நடக்கிறது. பக்தர்களும் சிலைகள் அருகே அனுமதிக்கப்படுவதில்லை. எட்ட நின்றே கும்பிடுகிறார்கள். அப்போது ‘கற்பூர கொளுத்தி‘ என்ற நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. பக்தர்கள் 50, 100 ரூபாய்க்கு கற்பூரத்தை வாங்கி வந்து மொத்தமாக கொளுத்துகிறார்கள். 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வதால், கற்பூரம் பிரமாண்டமாய் எரியும். விழா முடிந்ததும் மருதேரி தோப்பில் உள்ள சிறிய அறையில் அம்மன் சிலைகள் வைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பேயோட்டும் பூஜையும் நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook