கற கற குரல் மைனஸா? வசுந்தரா பதில்
‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். ‘பேராண்மை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் கூறியது:எனது சொந்த பெயர் வசுந்தரா தாஸ். வசுந்தரா பெயரில் வேறு நடிகைகள் இருப்பதால் என் பெயரை அதிசயா என இயக்குனர் சரண் சென்டிமென்ட்டாக மாற்றினார். ஆனாலும் வசுந்தராதாஸ் என்றே என்னை குறிப்பிட்டார்கள். சிலர் எனது பெயரை வசுந்தரா ராஜேஷ் என்று தவறாக குறிப்பிடுகிறார்கள். எனவே தற்போது வசுந்தரா காஷ்யப் என மாற்றிக்கொண்டேன். எனது குடும்பத்துக்கும் சினிமாவுக்கும்
சம்பந்தம் கிடையாது. விசேஷ நாள் தவிர வீட்டில் சினிமா பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் நடிகையாகிவிட்டேன். வழக்கமான கதாபாத்திரங்களைவிட மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.எனது கற கற குரல் பாதிபேருக்கு பிடிக்கும், பாதிபேருக்கு பிடிக்காது. சில படங்களில் சொந்த குரலில் பேசச் சொல்வார்கள். சிலர் சொந்த குரல்வேண்டாம் வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்கிறோம் என்பார்கள். ‘மைக்கேல் ஆகிய நான்’, ‘புத்தன் இயேசு காந்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.இவ்வாறு வசுந்தரா கூறினார்.