பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்திருந்தார். மீண்டும் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி அமைந்த நிலையில், மதுவிலக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நிதிஷ்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில், மதுவிலக்கு சட்ட மசோதா நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேறியதை அடுத்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுவிலக்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், இன்றுமுதல் பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
உள் நாட்டு மது வகைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு மதுவகைகள் விற்க நகர்புறங்களில் உள்ள குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையும் படிப்படியாக குறைக்கப்பட்டு விரைவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட உள்ளது.மதுவிலக்கு அமலுக்கு வந்ததால் கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அ தை தடுக்க சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சாராயம் காய்ச்சினால் அதிகபட்சமாக மரண தண்டனை, பொது இடங்களில் மதுகுடித்தால் 10 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலுக்கு வந்துள்ளதால் பெண்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.