கவுகாத்தி, -அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைக்க அசாம் கனபரிஷத் கட்சி முன்வந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு தினங்களில் அறிவிக்கப்படும் என இரு கட்சி தலைவர்கள் கூட்்டாக நேற்று தெரிவித்தனர்.அசாம் உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதி நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாமில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் பாஜ தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரசுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து அசாமில் ஏற்கனவே இரண்டு முறை ஆளும் கட்சியாக இருந்த அசாம் கனபரிஷத்துடன் பாஜ கூட்டணி உறுதியாகியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக சில தினங்களுக்கு அசாம் கனபரிஷத் அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் பிரபுல்லா குமார் மகாந்தா பாஜ தலைவர் அமித் ஷாவுடன் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பாஜவின் முதல்வர் வேட்பாளர் சர்பானந்தா சோனோவால், ஏஜிபியின் அதுல் போரா உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் சட்டமன்ற தேர்தலை கூட்டாக சந்திப்பது என இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டன. இந்த தகவலை மகாந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அப்போது தொகுதி பங்கீடு குறித்த விவரமும் வெளியிடப்படும் எனவும் மகாந்தா தெரிவித்தார்.கடந்த 2009 மக்களவை தேர்தலை பாஜவும், ஏஜிபியும் கூட்டணி அமைத்து சந்தித்தன. அப்போது பாஜவுக்கு 4 இடங்களும், ஏஜிபிக்கு ஒரு இடமும் கிடைத்தது. 2014 மக்களவை தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. அப்போது பாஜவுக்கு 7 இடங்கள் கிடைத்தன. ஏஜிபி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.