ராய்பூர், -சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 23 பேர் சரணடைந்தனர். தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்க அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் சிறப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மனம் திருந்தி சரணடைய மாவோயிஸ்ட்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு, மறுவாழ்வுக்கான நிதி உள்ளிட்டவற்றை அரசு அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் பலரும் போலீசில் சரணடைந்து வருகின்றனர். அந்தவகையில், பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த மாவோஸ்டுகள் 23 பேர் நேற்று போலீசில் சரணடைந்தனர். இதில் 2 பேர் பெண்கள். சரணடைந்தவர்களில் 3 பேர் கமாண்டராக செயல்பட்டவர்கள். இவர்களை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், மூவரும் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்களது ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக தாங்கள் வழிநடத்தப்படுவதாலும், தங்களுடைய தலைவர்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும் இயக்கத்தில் இருந்து விலகியதாக சரணடைந்த மாவோயிஸ்ட்கள் தெரிவித்தனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றை மாவோஸ்டுகள் வைத்திருந்தனர். சரணடைந்த மாவோயிடுகளுக்கு தலா ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மாவோஸ்டுகள் சரணடைவதை சிலர் விமர்சிக்கின்றனர். அப்பாவி கிராம மக்களை பிடித்து போலியாக கணக்கு காட்டுகின்றனர் என்றும், மாவோயிஸ்ட்கள் அடையாள அட்டைகள் எதுவும் வைத்திருக்க மாட்டார்கள் என கூறுகின்றனர். இது தவறு. தற்போது பிடிபட்டுள்ளவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள்’’ என்றனர். பஸ்தார் மாவட்டத்தில் கடந்த 28ம் தேதியன்று 23 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.