திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று காலை கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தை மாத பிரமோற்சவ விழா 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாளான இன்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 7 மணிக்கு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 7ம் நாளான, 9ம் தேதி காலை தேர்த் திருவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை வீரராகவ பெருமாள் கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.