சென்னை: சந்திரகிரகணம் இன்று இரவு ஏற்படுகிறது. 30 நாட்களில் 3 கிரகணம் நிகழ்வதால், பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. இரவு 11.52 மணிக்கு கிரகணம் தொடங்கும். அதிகாலை 12.52 மணிக்கு முழு சந்திர கிரகணம் தெரியும். 2.33 மணி வரை முழு கிரகணம் நீடிக்கும். அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடையும். இதுகுறித்து பிர்லா கோளரங்கம் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
சந்திரன் நிறம் மாறுவது தெளிவாக தெரியும். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்கள் சந்திர கிரகணத்தை பார்க்க வசதியாக பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கி கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை. இன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை இந்தியாவிலும், தமிழகத்திலும் பார்க்கலாம். மேலும், ஜூலை 1ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் பார்க்க முடியாது.
30 நாட்களில் 3 கிரகணங்கள் நிகழ்வதால் பூமிக்கு ஆபத்து என்று அறிவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், யாரும் பயப்பட வேண்டாம். பூமிக்கு ஆபத்து ஏற்படாது. இதுபோல, 2009ம் ஆண்டு ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது, பூமிக்கு எவ்வித ஆபத்து ஏற்படவில்லை. 2013ம் ஆண்டும் ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் நிகழ உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு ஆண்டுக்கு 7 கிரகணங்கள்
பொதுவாக ஒரு ஆண்டில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். அதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். சில சமயம் ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். முழு சூரிய கிரகணத்தின் நேரம் 7.5 நிமிடங்கள் ஆகும்.
திருப்பதி கோவில் நடை சாத்தப்படுகிறது
கிரகணத்தின் போது விரதம் இருப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். முக்கியமாக அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களை கழுவி சுத்தம் செய்வார்கள். சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் நடைகள் சாத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோவில் முன்பாக போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சந்திர கிரணம் முடிந்தவுடன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.