மீண்டும் நடிக்க கஜோலை சம்மதிக்க வைத்த மகள்
திருமணம் ஆகிவிட்டது குடும்பம், குழந்தைகளை கவனிக்க வேண்டி இருப்பதால் நடிப்பிலிருந்து விலகும் ஹீரோயின்கள் பலர். அப்படி விலகியவர் கஜோல். தமிழில் பிரபு தேவாவுடன் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தவர். இந்தியில் இவர் நடித்த ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயெங்கே’ மும்பையில் 6 வருடத்துக்கு மேல் ஒரே தியேட்டரில் ஓடியது. திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காமல் ஒதுங்கியே இருந்தார் கஜோல். பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு ‘தில்வாலே’ படத்தில் நடித்து வருகிறார். இவர் மீண்டும் நடிக்க வரக்காரணம் அவரது மகள் நைசாதான்.
இதுபற்றி கஜோல் கூறியது: என்னை மீண்டும் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியது என் மகள்தான். நடிக்கச் சென்றால் உன்னுடன் நேரம் செலவழிக்க முடியாது. அவுட்டோர் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று எடுத்துச்சொன்னேன். பரவாயில்லை என்று கூறிய அவள், ‘படங்களில் நீ அழாமல் நடிப்பதை பார்க்க வேண்டும். எப்போது பார்த்தாலும் படத்தில் நீ அழ ஆரம்பித்துவிடுகிறாய். அது போரடித்துவிட்டது. ஜாலியான, காமெடியான வேடத்தில் நடி. நான் சந்தோஷமாக படம் பார்க்க முடியும்’ என்றாள். அப்படியே நடிக்கிறேன் என்றேன்.