சொந்த படம் தயாரிக்க 60 கதைகள் கேட்ட சூர்யா
நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா என பலர் சொந்த நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்கின்றனர். கமர்ஷியல் படங்களை தயாரிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு இடையே சூர்யா தொடங்கி இருக்கும் 2டி என்டர்டெயின்மென்ட் பற்றிய விளக்கம் வித்தியாசமானது. இது பற்றி அவர் கூறியது: என் குழந்தைகள் தியா, தேவ் பெயரை குறிக்கும் வகையில் 2டி பட நிறுவனம் தொடங்கப்பட்டது. கல்வி மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பயன் தரும் படங்கள் தயாரிப்பதுதான் நோக்கம். இந்நிறுவனம் மூலம் படம் தயாரிக்க 50, 60 கதைகளை கேட்டும் சரியாக அமையாததால் காத்திருந்தோம். அப்போது இயக்குனர் பாண்டிராஜ் ஒரு சிடி கொடுத்து பார்க்கச் சொன்னார். 2 வருடம் குழந்தைகள்பற்றி ஆய்வு செய்து அதனை ஒன்றிணைத்து பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுபோல் கதை அம்சத்துடன் கூடிய படம் உங்கள் நிறுவனம் மூலம் வரவேண்டும் என்றார். எங்கள் நோக்கமும் அதுவாக இருந்ததால் ‘பசங்க 2’ படம் உருவானது. இப்படத்தில் குழந்தைகள் நடித்துள்ளனர். மிகவும் சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இப்படத்ைத பார்க்க வரும் குடும்பத்தினர் ஒரு அறிவுரையை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.
இவ்வாறு சூர்யா கூறினார்.