தரங்கம்பாடி: நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்கு செல்ல மகாத்மா காந்தி, துணைவியார் கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரசில் மயிலாடுதுறை வந்தார். மறுநாள் அங்கிருந்து இரட்டை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடிக்கு வந்தார். டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரக வாதிகளும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். மே 1ம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார். தில்லையாடி பகுதியை சேர்ந்த பலர், தென் ஆப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் தில்லையாடி வள்ளியம்மை. இவரின் பெற்றோர் தில்லையாடியை சேர்ந்தவர்கள். தில்லையாடியில் காந்திஜி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. தில்லையாடிக்கு காந்தி வருகை தந்த 100ம் ஆண்டு நாள் வரும் மே 1ம் தேதி வருகிறது. அந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தில்லையாடி கிராம பொதுநல சங்க தலைவர் ஜெகதீசன் கூறும்போது, ' தில்லையாடிக்கு மகாத்மா காந்தி வந்து 100 ஆண்டுகளாக போகிறது. காந்திக்கும், வள்ளியம்மைக்கும் புகழை சேர்க்கும் வகையில் இதை அரசு விழா நடத்த முன்வர வேண்டும் என்றார்.பேராசிரியர் மரியலாசர் கூறும்போது, தலித் மக்களின் அவலநிலையை தில்லையாடியில் காந்தி நேரில் பார்த்தார். தில்லையாடியின் பயணமே, தலித் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காகவும் பாடுபட போகிறேன் என்று காந்திஜி சபதம் ஏற்க காரணமாக இருந்தது என்று வரலாற்று வல்லுனர்களின் கருத்தாக உள்ளது என்றார்.தில்லையாடி அருணாசல கவிராயர் இலக்கிய பேரவை அமைப்பாளர் வீராசாமி கூறும்போது, காந்தியின் நூற்றாண்டு விழா தில்லையாடியில் அரசு விழாவாக நடந்துள்ளது. காந்தி நூற்றாண்டு விழாவில் தான் வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. காந்தி ஜெயந்தி விழாவும் அரசு விழாவாக தில்லையாடியில் தான் நடந்துள்ளது. இதேபோல் தில்லையாடிக்கு காந்தி வந்த நூற்றாண்டு நாள் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றார்.