பாகிஸ்தான் ராணுவம் அதிரடி: 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் 9 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 138 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தீவிரவாதத்துக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கியது. மரண தண்டனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.தீவிரவாதிகளை ஒடுக்கி வரும் ராணுவம், வான்வழி தாக்குதல் மூலம் அவர்களின் முகாம்களை அழித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கராச்சியில் உள்ள கெமரி, சோஹ்ரப் கோத் ஆகிய பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இன்று அதிகாலை விரைந்து சென்ற வீரர்கள், அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பதுங்கியிருந்த தலிபான் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இருவேறு இடங்களில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் காயம் அடைந்தனர். கராச்சி பகுதியில் செயல்படும் தீவிரவாத குழுவின் தலைவனும் இந்த தாக்குதலில் பலியானார். இதையடுத்து, அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.