உலகின் அபாயகரமான டி-20 பேட்ஸ்மேனான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், இங்கிலாந்தின் சாமர்செட் கிளப் அணிக் காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 8ம் தேதி துவங்கி, மே 24ம் தேதி வரை நடக்கிறது. ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுகள் மே 19ம் தேதி துவங்குகிறது. ஒரு வேளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறாவிட்டால், கிறிஸ் கெயில் மே 22ம் தேதி, சோமர்செட் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்வெஸ்ட் டி-20 தொடரில், சாமர்செட் அணி மே 22ம் தேதி சசக்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி காலிறுதியுடன் வெளியேறி விட்ட நிலையில், கிறிஸ் கெய்லுக்கு, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இன்னும் சில வாரங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சாமர்செட் அணிக்காவும், கரீபியின் பிரீமியர் லீக்கில், ஐமைக்கா அணிக்காகவும் விளையாட உள்ளார்.
முன்னதாக சாமர்செட் அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோகைல் தன்வீர் மற்றும் நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சனையும், தங்கள் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. சாமர்செட் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மேட் மேனார்டு கூறுகையில், ‘உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலை, எங்கள் கிளப்புக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளோம். எங்கள் அணி ஏற்கனவே வலுவாக உள்ளது. கெயில் வருகையின் மூலம் மேலும் வலுப்பெறுவோம். கெயிலை ஒப்பந்தம் செய்துள்ளதில் மகிழ்ச்சி’ என்றார்.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டில், சாமர்செட் அணிக்காக கெயில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் தலையீட்டால், அவர் நாடு திரும்பினார். ‘நடப்பு ஆண்டுக்கான நாட்வெஸ்ட் டி-20 தொடரில், சாமர்செட் அணியில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என கெயில் கூறியுள்ளார். டி-20 போட்டிகளில், 30 பந்துகளில், அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை கிறிஸ் கெயில் வசம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்தான், உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கெயில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.