கோட்டை முன் தீக்குளிக்க முயன்ற பார்வையற்ற 2 பேர் கைது
சென்னை: தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற பார்வையற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மணலியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (42), அரக்கோணத்தை சேர்ந்தவர் ரகு (48). பார்வையற்றவர்கள். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகம் எதிரே வந்தனர். தங்கள் கைகளில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதைப் பார்த்த தலைமை செயலகம் அருகே இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, கைது செய்தனர். பாரிமுனை பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.இது குறித்து போலீசாரிடம் ஜேம்ஸ் கூறியது:
பார்வையற்றவர்களுக்கு அரசு வேலைகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் பார்வையற்றவர்களுக்கு இதுபோன்ற அரசு வேலைகள் ஒதுக்கப்படுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை. நாங்கள் வாழ்வதற்கு அரசு ஒரு வழியை ஏற்படுத்தி தரவேண்டும். சமூக நலத்துறையினர் பார்வையற்றவர்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பதை ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டும். வீடு இல்லாத பார்வையற்றவர்களுக்கு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும். இதற்காகவே தீக்குளித்தோம்இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.