புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை நீக்க வேண்டும் எனக் கோரி திமுக பொதுச்செயலாளர்கள் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் தொடர்ந்து ஆஜராகி வருவதை ரத்து செய்யகோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ‘சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் அப்பீல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு கர்நாடக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு மூத்த வக்கீலை நியமிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்றும், ' மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும்' என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீது கர்நாடக அரசு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வரும் 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், 18ம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, க.அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்தி அர்ஜுனா, ' இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளோம், அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்Õ என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் வரும் 24ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.