வால்பாறை மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ் 7 பேர் காயம்; 50 பேர் தப்பினர்
வால்பாறை: வால்பாறையில் இருந்து சோலையார் அணையை அடுத்து உள்ள ஷேக்கல் முடி எஸ்டேட்டுக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சோலையார் அணையை அடுத்த கல்யாணப்பந்தல் தனியார் தேயிலை தொழிற்சாலை அருகே மலைப்பாதையில் பஸ் சென்ற போது எதிரே வந்த மற்றொரு அரசு பஸ்சுக்கு வழிவிட டிரைவர் சங்கர், பஸ்சை இடதுபுறம் ஓரம் கட்டினார். இதில் நிலை தடுமாறிய பஸ் தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் அப்படியே சாயத் தொடங்கியது. பள்ளத்தை நோக்கி பாய்ந்ததால் பயணிகள் அலறினர். பஸ்சின் மையப்பகுதி சாலை தடுப்பில் சிக்கி அந்தரத்தில் நின்றது. சில பயணிகள் வலது பக்க ஜன்னல் வழியாக குதித்து தப்பினர். பஸ்சில் இருந்து இறங்க முயன்ற முருகாளி எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையலர் சுலோச்சனா(35), அப்பகுதியை சேர்ந்தபாலன்(58), நாராயணன்(42), ஜெயபால்(45), சுந்தரராஜ(48), முத்துசாமி(60), மாணவன் விஜய் (17) ஆகியோர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்தனர். இவர்கள் முருகாளி தோட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.