செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், வடக்கு மேட்டுப்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, கெப்புசோலைப்பட்டி, கெண்டையம்பட்டி, ராமநாதபுரம், கூத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், மக¢காச்சோளம், நெல், கரும்பு, வாழை, கொண்டை கடலை, துவரை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.செம்பட்டி அருகே வண்ணம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் இன்சூரன்ஸ் பெற ஏக்கருக்கு ரூ.136 வீதம் பிரீமியம் செலுத்தி, ரசீது பெற்று உள்ளனர். பிரீமியமாக ரூ.10 லட்சம் வரை விவசாயிகள் செலுத்தியுள்ளனர். ஆனால் இந்த தொகையை வங்கி செயலர், அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனிக¢கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இன்று வரை காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுகுறித்து, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சென்று கேட்டுள்ளனர். இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் யாரும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இல்லை என்று, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், நேற்று முன்தினம் வண்ணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். 2013ல் வங்கி செயலராக பணியாற்றியவர், விவசாயிகள் செலுத்திய பிரீமிய தொகையை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் பரவியதும், நேற்று காலை எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், வண்ணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளுக¢கு எதிராக கோஷம் போட்டனர். இதனால் அலுவலகத்தில் இருந்த ஒரு சில ஊழியர்களும் வெளியே சென்றுவிட்டனர். திடீரென விவசாயிகள், கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை இழுத்து மூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘‘பிரீமியத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தாமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத் தரவேண்டும்‘ என்றனர்.