இந்தியன்வெல்ஸ்: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் 4- சுற்றுப்போட்டிகள் இன்று அதிகாலை நடந்தன. உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோதினார். துவக்கத்தில் தனது சர்வீஸ்களில் சற்று தடுமாறினார் செரீனா வில்லியம்ஸ். 90 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயிலுக்கிடையே நடந்த ஆட்டத்தில் வில்லியம்ஸ், 52 முறை அனாவசிய தவறுகளைச் செய்தார். தனது சர்வீஸில் அவர் 9 ‘டபுள் பால்ட்‘ தவறுகளையும் செய்தார். ஆனால், 13 ஏஸ் சர்வீஸ்கள் மற்றும் 31 வின்னர் ஷாட்கள் அவருக்கு கை கொடுத்தன.
முதல் செட்டில் 1-3 என்ற கேம் கணக்கில் பின்தங்கிய ஸ்டீபன்ஸ் பின்னர் மீண்டு வந்து சமன் செய்ததுடன் செட்டையும் டை பிரேக்கர் வரை கொண்டு சென்றார். டை பிரேக்கரில் ஆதிக்கம் செலுத்திய ஸ்டீபன்ஸ், அதனை எளிதில் வென்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்களிலும் அசத்தலாக சர்வீஸ்களை விளாசி கேம்களை கைப்பற்றினார் செரீனா வில்லியம்ஸ். கடைசி செட்டில் ஸ்டீபன்ஸின் சர்வீஸ் கேம்களை மூன்று முறை முறியடித்தார் செரீனா. இதன் மூலம் முன்னிலை பெற்ற செரீனா வில்லியம்ஸ், மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அதி வேக ‘ஏஸ்‘ சர்வீஸ் மூலம் வெற்றிக்கனியை பறித்தார். இந்தப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-7 (3-7), 6-2, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரொமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர் கொண்டார். இந்தப்போட்டியில் அதிரடி சர்வீஸ்களை வீசிய ஹாலேப், இரண்டு செட்களிலும் தலா ஒரு முறை பிளிஸ்கோவாவின் சர்வீஸ் கேமை முறியடித்தார். இதனால், ஹாலேப் 6-4, 6-4 என நேர் செட்களில் வென்றார்.ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவரோ, பிரிட்டனின் ஹீதர் வாட்சன் ஆகியோர் மோதிய போட்டி கடுமையானதாக அமைந்தது. முதல் செட், டை பிரேக்கர் வரை நீடித்தது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் டைபிரேக்கரில் வென்று முதல் செட்டை கைப்பற்றிய கார்லா சுவாரசுக்கு 2வது செட்டில் அதிர்ச்சி கொடுத்தார் ஹீதர் வாட்சன். அதில் கார்லா சுவாரெசின் சர்வீஸை முறியடித்தார் வாட்சன். இதன் மூலம் இரண்டாவது செட் வாட்சன் வசமானது. மூன்றாவது செட்டில் சுதாரித்து ஆடிய கார்லா சுவாரெஸ், ஹீதர் வாட்சனின் சர்வீஸ்களை தொடர்ச்சியாக முறியடித்து அசத்தினார். இந்தப்போட்டியில் கார்லா சுவாரஸ் 7-6 (7-5), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.